News
First on SimpliCity: கோவை வடவள்ளியில் மாநகராட்சிக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு!
SimpliCity News Team · 21 Aug 2021
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வடவள்ளி கிராமம் மருதமலை ரோடு பகுதியில் 7.15 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 77 மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், 71 சென்ட் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 10%, அதாவது 9 சென்ட் கடைகளுக்காக என நகர ஊரமைப்பு முதுநிலை மண்டல துணை இயக்குனர் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து கோவை மாநகராட்சி செயற்பொறியாளர் (ஆக்கிரமிப்புகள்) ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் இடத்தை மீட்டெடுத்து அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர், ஆர்.டி.ஐ. தியாகராஜன் கூறுகையில், கோவை மாநகராட்சி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும். கடந்த 40 வருடங்களாக, இந்த இடத்தை ஆக்கிரமித்து போர்வெல் அமைத்து 30 தென்னை மரங்களுடன் 50 மாடுகள் வைத்து ஒருவர் பால் வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது. தற்போது, மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை மீட்டு எடுத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது, என்றார்.